கீழச்சேரி பங்கின் வரலாறு

தேவன் அதிசயங்களை காணப்பண்ணுவார், ஆச்சரியங்களை அளித்து மகிழுவார், அற்புதங்களை உணரச் செய்வார், என்பதற்கு என்றும் சான்றாய் விளங்குகிறது கீழச்சேரி கிராமம்… இது தெலுங்கு கிறிஸ்தவர்களின் உரோமாபுரி என்று அழைத்தால் அது மிகையாகாது….

அகவை 234 -ஐ நிறைவு செய்யும் கீழச்சேரியின் முன்னோர்கள் கடந்து வந்த பாதையை பின்னோக்கிய பயணம் அது….!

ஆம்…!

ஏறத்தாழ 300 -வருடங்களுக்கு முன்பு கண்டிக்கோட்டாவில் இருந்த இம் முன்னோர்கள் ஒலேரு சென்று அங்கிருந்து பசுமை எழில்மிகு கீழச்சேரி வந்தடைந்ததும் ஓர் புனித பயணம் தான்…..!

இப்புனித பயணத்தில் அவர்கள் அடைந்த இன்னல்கள்…, இடையூறுகள்…, அவமானங்கள்…, அற்புதங்கள்…, ஆச்சரியங்கள்…! எனப் பல்வேறு பட்ட அனுபவங்களை சற்றே பின்னோக்கி பார்ப்போம்…!

16-ம் நூற்றாண்டு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த காலம். அன்பின் மதம் (கிறிஸ்தவம்) ஆங்கிலேயரின் மதமாகவே பார்க்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு இருந்த எதிர்ப்பு அன்பிற்கும் இருந்தது. உண்ண மறுக்கும் குழந்தைக்கு நிலவுக்கதை உரைத்து உணவு அளிக்கும் தாயைப் போல கிறிஸ்துவின் அன்பை உணர்த்த காவி அணிந்து வந்தார் இராபர்ட டி நொபிலி. கிறிஸ்துவம் தமிழகத்தில் கருவுற்றது…!

17-ம் நூற்றாண்டு தெலுங்கர், தழிழர், கன்னடர்கள் என அனைவரும் அன்று பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்து வந்தனர். தமிழர்களிடம் கருவுற்ற கிறிஸ்துவம், தெலுங்கர்கள் மத்தியில் உருவாகத் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டின் மன்னர் பதிநான்காம் லூயி கிறிஸ்துவம் வளர்க்க அளித்த ஒப்பற்ற ஆதரவால், பல்வேறு இயேசுசபை குருக்கள் இந்தியாவிற்கு வந்தனர். இராபர்ட் டி நொபிலி வழியே தெலுங்கர்கள் மத்தியில் கிறிஸ்துவம் வளர்க்க அருட்தந்தை. மேத்யூ மற்றும் அருட்தந்தை. லயனோஸ் ஆகியோர் கர்னாடிக் மிஷன் என்ற அமைப்பை உருவாக்கினர்.

ஃப்ரெஞ்சு நாட்டு குருக்கள் தெலுங்கு மக்களிடம் ஆற்றிய பணிக்கு ‘கர்னாடிக் மிஷன்’ என்று பெயரிட்டனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து மேற்கு நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தனர்.

1701- புங்கனூரில் தேவாலயம் கட்டப்பட்டது. வேலமா -சாதியை சார்ந்த விதவை ஒருவர் மதமாற்றம் அடைந்தார். ஆம், இவரே முதல் தெலுங்கு கிறிஸ்துவர். 1707- சிக்மலாபுரத்தில் கிருஷ்ணாபுரத்தில் தேவாலயம் அமைக்கப்பட்டது.

1715 -அனந்தபுர் மன்னன் தனது ராஜ்ஜியத்தில் எங்கு வேண்டுமானாலும் தேவாலயம் எழுப்பிக் கொள்ளலாம் எனவும், அதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் தானே செய்து கொடுத்ததும் அன்றைய ஆட்சியாளர்களிடமும், மக்களிடமும் கிறிஸ்துவத்திற்கு இருந்த பெருமதிப்பை எடுத்துரைக்கின்றது.

1718 -ல் மடிக்குப்பாவில் தேவாலயம் அமைந்தது. இங்கு ரெட்டி வகுப்பினர் பலர் மதம் மாறினர்.

1735 -ல் கண்டிகோட்டையில் அரசு உயர் பதவிகளிலும், பெரும்தினவுக் கொண்ட போர் வீரர்களாயும் இருந்த கம்மவர்கள் மதமாற்றம் அடைந்தது இந்தக் காலக்கட்டத்தில் தான். ஞானஸ்தானம் பெற்ற முதல் கம்மா கிறிஸ்துவ பெண் என்பதும், அவர் பெயர் காலி அன்னம்மா என்பதும் கூடுதல் தகவல்.

1701 முதல் 1736 வரை 35 -ஆண்டுகள் கர்னாடிக் மிஷனின் வளர்ச்சி அபரிமிதமாய் இருந்தது. பல்வேறு இனத்தவர்கள் கிராமம் கிராமமாக மதம் மாறினார்கள். கிறிஸ்துவத்தை அறியாதோர் அறிந்தனர். அறிந்தவர் பயனுற்றனர்…, பயனுற்றோர் பல்கிப்பெருகினர்…. கிறிஸ்துவம் வெறும் மதமாற்றமாய் மட்டும் இல்லாது ஒட்டுமொத்த சமூகத்தின் மனமாற்றமாய் இருந்தது. தெலுங்கு கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை எண்பதாயிரத்தை தாண்டியது…! அன்பின் ஆளுகை நீண்டுகொண்ட போனது………..!

1752 – குண்டூர் ஃப்ரெஞ்சு ஆளுகைக்கு உட்படுத்தப் பட்டிருந்து. இது கிறிஸ்துவ வளர்ச்சிக்கு பெரும்துணை புரிந்தது. ஃப்ரெஞ்சு அரசாங்கம் கிறிஸ்துவர்களுக்கு பெரும் பாதுகாப்பை அளித்தது. இச்சீரான வளர்ச்சி வெகுகாலம் நீடித்திருக்கவில்லை….!

1762- இயேசு சபைக்கு ஃப்ரெஞ்சு நாட்டில் தடை விதிக்கப்பட்டது. குருக்களின் வரத்தும் பெருமளவில் தடைபட்டது.

1773- இயேசு சபை உலகம் முழுவதும் போப்பாண்டவரால் தடை செய்யப்பட்டது…!கர்னாடிக் மிஷன் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டது.

1744-1773 வரை ஃப்ரெஞ்சாரும் ஆங்கிலேயரும் தங்கள் வல்லமையினை நிரூபிக்க, தங்களுக்குள் போட்டுக் கொண்ட போரால் ஓர் நிலையற்ற தன்மை உருவானது…!

மேலும் வேலூர், சித்தூர், ஆற்காடு போன்ற நாட்டுப் புறங்களை திப்பு சுல்தான் படைகள் வேட்டையாடத் தொடங்கின. ஆங்கிலேயரை எதிர்த்து பலமுறை போரிட்டனர் அவரது படையினர். திப்பு சுல்தான் மதம் மாறிய இம் முன்னோர்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கினார். ஒரே சமயத்தில் மதம் மாறிய நாற்பதாயிரம் கிறிஸ்துவர்களை காட்டாய விருத்தசேதனம் செய்தார். திப்புசுல்தானின் சூறைக்கு கண்டிக்கோட்டையும் தப்பவில்லை…!

பெரும் பதவி வகித்த இம் முன்னோர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகினர். பஞ்சம், பசி, வறுமை, வெறுமை என அனைத்தும் ஒரே சமயத்தில் சூழ்ந்து நின்றனர். பிறந்த மண்ணின் பஞ்சம் இனி பிறக்கும் பிஞ்சுக்கேனும் வேண்டாம், என்று முன்னோர்கள் நவாபின் எல்லைகள் விட்டு நீர்நிலைகள் தேடி கூட்டம் கூட்டமாய் இடம் பெயரத் துவங்கினர்…!

1780 – புங்கனூரில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்களை திருச்சபை தடை செய்திருந்தாலும் (காரணம் இயேசு சபை குருக்களால் வழிநடத்தப்பட்ட மக்கள்) “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” – எனும் கூற்றின்படி அருட்தந்தை. ஹென்றி அர்னால்டு செல்லம்பட்டிடையில் குடிபெயர்ந்தார். கண்டிக்கோட்டை முன்னோர்கள் நீர்நிலைகள் தேடி கிருஷ்ணா நதிக்கரை ஓரம் ஓலேருவில் குடிபெயர்ந்தனர்.

ஆனால், அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை குடிபெயர்ந்திருப்பது அவர்கள் மட்டுமல்ல அவர்களது இன்னல்களும் தான் என்பது…!

ஆம், அதுவரை ஃப்ரெஞ்சார் வசம் இருந்த குண்டூர் ஆங்கிலேயர் வசம் ஆனது. ஃப்ரெஞ்சாரல் கிடைத்த உதவிக்கரம் கிட்டாமல் போனது…, வரிச்சுமை ஏறியது…, உடல்சுமை குறைந்தது…, பஞ்சம் நிறைந்தது…, நெஞ்சம் கனத்தது…, நீர் மிகுந்தது…., ஊர் அழிந்தது…., நீர் தேடிவந்த முன்னோர்கள் நீராலே பேரழிவைக் கண்டனர்…!

போர் அழிவைத் தாங்கினர், நீர் அழிவை தாங்கினர், இறந்த உடல்களில் இருந்து ஊரெங்கும் நோய்பரவி, மேய்ப்பன் அற்ற ஆடுகள் போல் செய்வதறியாது திகைத்து நின்றது இந்த சமூகம்…!

“ஆபத்து நாளிலே எனைக் நோக்கி கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய்” – என்றார் ஆண்டவர். ஆண்டவரைத் தவிர வேறேது நம்பிக்கை, அந்த கடும் சோதனைகளிலும் நம்பிக்கை குறையாமல், நெஞ்சம் தளராமல் ஆண்டவரை மட்டும் வேண்டி நின்றது இந்த சமூகம்.

1786 – அதிசயம் நிகழ்ந்தது…..! அடிமைப்பட்ட இஸ்ரவேலர்களை பாலும் தேனும் ஓடும் கானானிற்கு அழைத்து செல்ல மோயிசனுக்கு உத்தரவிட்ட நம் தேவன், தன்னை மட்டும் நம்பி நிற்கும் மக்களை காக்க வராமல் இருப்பாரா என்ன..? ஓலேருவிற்கு மோயிசன் வழியில் வந்து சேர்ந்தார் இத்தாலியைச் சேர்ந்த அருட்தந்தை. ஜார்ஜியே மனந்தே.

மக்களின் நிலைக்கண்டு கலங்கினார், அவர்களை ஆறுதல்படுத்தி தேற்றினார். அப்போது அங்கிருந்த சூழ்நிலைகள் அவர்களுக்கு சற்றும் சாதகமில்லை என உணர்ந்தார்.

அவர்கள் குடியேற, வாழ நல்லதொரு இடத்தைப் பெற்று தர எண்ணினார் அருட்தந்தை. மனந்தே.

அப்போது மதராஸ் மாகாணத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஆர்ச்சிபால் கேம்பல் என்பவரை அனுகினார். ஃப்ரெஞ்சு நாட்டை சேர்ந்த இயேசு சபை குருவிற்கு ஆங்கிலேய கவர்னர் எப்படி தருவார் அனுமதி…! ஆம், ஆண்டவர் ஆச்சரியத்தை அளித்து மகிழ்ந்தார். கேம்பல் அனுமதி கொடுத்தார்.

தன் சொந்த பணத்தில் தமது மக்களுக்காக கூவத்திற்கும் மப்பேடுவிற்கும் இடையே இயற்கை எழில்மிகு வளமிகு ஓர் இடத்தை பெற்றுதந்தார் அருட்தந்தை. மனந்தே. அதுவே இன்று இம்மக்கள் 234 ஆண்டுகளாக இன்னலின்றி இனிதாய் இயற்கைவளம் சூழ வாழும் “கீழச்சேரி”

கீழச்சேரியை இன்றும் இந்த மக்கள் பாலும் தேனும் ஓடும் கானானிற்கு இணையாகவே கருதுகின்றனர்.

அனுமதி பெற்றதோடு மட்டுமில்லாமல் ஓலேருவிலிருந்து சுமார் 350 குடும்பங்கள் இடம்பெயர ஏறத்தாழ 400 மைல் தூரத்தை மூன்று மாத காலமாக அவர்களுடனேயே உண்டு, உடுத்து, களித்து தன் சொந்த செலவிலேயே அழைத்து வந்தார் அருட்தந்தை. மனந்தே. இந்தப் பயணத்தை மோயிசனின் புனித பயணத்தோடு ஒப்பிட்டால் அது மிகையல்ல…!

கீழச்சேரி உருவானது:

1790 – விண்ணரசி (பரலோக மாதா) ஆலயமாக கீழச்சேரி ஆலயம் எழுப்பப்பட்டது.

1802 – இயேசு சபை குருக்கள் முதுமை காரணமாய் பணிபுரிய தவிர்த்தனர். பலர் வேறு சில ஊர்களுக்கு இறைப்பணி பரப்பிட சென்றனர்..! வளர்ச்சி சற்று தடைப்பட்டது…!

அதிசயங்களையும்..! ஆச்சரியங்கயையும்..! அளித்த நம் தேவன் அற்புதங்களையும் உணரச் செய்தார்…! கீழச்சேரி மெல்ல… மெல்ல… வளர்ச்சிப் பாதைக்குள் சென்றது. முன்னோர்களின் கடுமையான உழைப்பால், ஆண்டவரின் அளப்பரிய கருணையால் கீழச்சேரி செல்வம் கொழிக்கும் பூமியாக மாறத் தொடங்கியது. பஞ்சம் என்ற வார்த்தை அனைவரின் நெஞ்சத்தை விட்டு நீங்கிச் சென்றது.

1857- கீழச்சேரியில் குருத்துவமடம் இருந்தது. கீழச்சேரியை தாய்க் கிரமமாக கொண்டு சுற்றுவட்டாரத்தில் 16 -பங்குகள் உருவாக்கப்பட்டன. இன்றும் தெலுங்கு கிறிஸ்தவர்களின் தாயாகவே விளங்குகிறது “கீழச்சேரி”.

1874 -தாட்டிபத்திரி ஞானம்மா எனும் இளம் விதவையைக் கொண்டு கீழச்சேரி -யில் புனித அன்னாள் சபை உருவானது.

1880 – உணவுப் பசியை போக்கிய ஆண்டவர் அறிவுப்பசியை போக்க எண்ணிணார். கீழச்சேரியில் ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டு மிகப்பிரசித்தி பெற்றது.

1900 -அருட்தந்தை. மிக்களாஸ் வருகை. இன்று நாம் துதிக்கும் திரு இருதய ஆண்டவர் ஆலயம் எழுப்பப்பட்டது. கல்வி தளங்கள் மூலம் அனைவருக்கும் கல்விக் கண் திறக்க அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டார் அருட்தந்தை மிக்களாஸ். கீழச்சேரியில் வாழும் அனைவரும் கல்விக் கற்றலின் மூலம் எந்த தேசமும் தூரமில்லை, எந்த தொழிலும் பாரமில்லை என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தினார்.

இதன்பின் பல குருக்களின் தன்னலமற்ற சேவையால் கீழச்சேரி செழிப்புற்றது. அருட்தந்தை. கென்னடி, அருட்தந்தை. லாசர் சோமா, அருட்தந்தை. P. பாலசாமி, அருட்தந்தை. இன்னைய்யா ஆகியோரின் ஒப்பற்ற ஏற்றமிகு பணிகள் இதில் அடங்கும்.

1986-1998 அருட்தந்தை K. M. ஜோசப் -ன் காலம் கீழச்சேரியின் பொற்காலம் என்றே கூறலாம். திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை சீரமைக்க பேருதவி புரிந்தார். இவர் ஆற்றிய பணிகள் என்றும் கீழச்சேரி மக்களிடம் நீங்காத நினைவுகளாகவே இருந்து வருகிறது.

தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிறந்து விளங்குகிறது கீழச்சேரி ஆலய இறை சமூகம்.

இன்று இவர்கள் பெற்ற இந்த ஆசீர்வாதம் முன்னோர்களின் கடுமையான இறை விசுவாசத்தினாலும், இன்னல்களின் போதும் ஆண்டவரின் மேல் வைத்த நம்பிக்கையால் சோதனைகளை தாங்கும் சக்தியினாலும் இவர்கள் பெற்றதாகும்.

இனி வரும் காலங்களிலும் ஆண்டவரின் மீது விசுவாசம் குறையாமல் அன்பு வளர்க்கும் பண்பினாலும் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இந்த கீழச்சேரியை மென்மேலும் மகிமைப்படுத்துவோம்..

முன்னோர்களின் கடும் போரட்டம்…… இறைவனின் மேல் கொண்ட கடும் விசுவாசம்……

தல்லி கிராமம் தளிர்த்து வாழட்டும், ஒற்றுமை வளரட்டும், தேவனுக்கே மகிமை.